
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மருத்துவர் தேர்வு ஆணையத்தின் மூலம் 2015ம் ஆண்டு செவிலியர்களாக 11,000க்கும் அதிகமானோர் பணியில் அமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களுக்கு இன்னமும் பணி நிரந்த ஆணை வழங்கப்படவில்லை. ஏழாயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்களாக செவிலியர்கள் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழக அரசிற்கு பல்வேறு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இதைதொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களின் போராட்டம் குறித்து அவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.