அதிகாரிகளின் நிர்வாண கார்டூன் பேனருடன் ஆர்ப்பாட்டம்... சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு! 

First Published Nov 28, 2017, 6:51 PM IST
Highlights
case registered against chennai press club members for an agitation with cartoon banner


கார்டூனிஸ்ட் பாலா கைது விவகாரத்தில் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்திய சென்னை பத்திரிகையாளர்  மன்ற நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில், சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தினை, அனுமதியின்றி பேனராகப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

கந்துவட்டி பிரச்னை தொடர்பாக காவல் துறையினரிடம் சரியான தகவல் தொடர்பின்மையால், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வந்தார் நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்த  இசக்கிமுத்து என்பவர் குடும்பத்தினர். பின்னர், அக்டோபர் 23ஆம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் நல்வரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தினை வைத்து, கார்ட்டூன் ஒன்று வரைந்தார் சென்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்கிற பாலா. இவர், வார இதழ் ஒன்றில் கார்ட்டூனிஸ்டாக பணி புரிந்து வந்தார். இந்தக் கார்டூனை தனது முகநூல் பக்கத்தில் அக்.24ம் தேதி பதிவு செய்திருந்தார். அது பரவலாக இணையதளங்களில் ஷேர் செய்யப் பட்டது. அந்த கார்ட்டூனில், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், முதல்வர் ஆகியோரை நிர்வாணமாக வரைந்து, பணத்தாள்களால் மறைத்துக் கொண்டிருப்பது போல் இழிவு படுத்தியிருந்தார். 
  
இந்தக் கேலிச்சித்திரம் தொடர்பாக, அக்டோபர் 31ஆம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000இன் படி நெல்லை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதை அடுத்து நவ.5 ஆம் தேதி சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர், கார்ட்டூனிஸ்ட் பாலாவைக் கைது செய்து நெல்லை அழைத்துச் சென்றார். பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  

இந்நிலையில் நவ.7ஆம் தேதி பாலாவின் கைதைக் கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்பொழுது பாலாவின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தினை பேனராக பயன்படுத்தினர். ஆனால், இத்தகைய ஆட்சேபணைக்குரிய கேலிசித்திரத்தை பேனராக வைத்து, அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும், பாரதி தமிழன், அசதுல்லா உள்ளிட்ட சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மீது  காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் எம்.மருது அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

click me!