
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் ஏற்கனவே தமிழகத்தின் கடலோர பகுதியில் உருவான குறைந்த அழுத்த தாழ்வுநிலை தற்போது வலு இழந்து விட்டது. அதே நேரம் தமிழக கடலோர பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி இருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் , குமரி முதல் தென்மேற்கு வங்க கடல் வரை இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தனது வலுவை இழந்துவிட்டது. தற்போது இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் புதியதொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தென் மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் அநேக இடங்களில் மழை பெய்யும்.
ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களிலும் மிதமான அளவுக்கும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான அளவுக்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆண்வு மையம் தெரிவித்துள்ளது.