
திருச்சி
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் அரியவகை சிலைகள் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ளன என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. ஏ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. ஏ.ஜி. பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: “தமிழர்களின் அரிய கலை பொருட்களான கோயில் சிலைகளை வாங்குவதில் வெளிநாட்டினருக்கு அதிக மோகம் உள்ளது. இதைப் பயன்படுத்தி சிலை கடத்தல் கும்பல்கள், தமிழக கோயில்களின் சிலைகளை கடத்தி வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதித்துள்ளனர்.
இதில் அமெரிக்காவுக்கு மட்டும் 1000-க்கும் மேற்பட்ட சிலைகள் கடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுதவிர பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் அருங்காட்சியகங்களில் தமிழகத்திலிருந்து திருடப்பட்ட சிலைகள் உள்ளதை அந்தந்த நாடுகளின் காவலாளர்களே ஒப்புக்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.
சிலை கடத்தல் தொடர்பாக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் 363 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் புலன்விசாரணையில் உள்ளன. 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மீதமுள்ள வழக்குகள் கண்டுபிடிக்க முடியவில்லை என காவலாளர்களால் கைவிடப்பட்டுள்ளன.
கைவிடப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் எனது தலைமையிலான காவல் அதிகாரிகள் விசாரிக்க உள்ளோம். வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள கோயில் சிலைகள் குறித்தும், அது தமிழகத்தைச் சேர்ந்தவை என்பதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் அரசுகளுக்கு சிலைகளை திரும்ப வழங்கக் கோரி மூன்று கடிதங்கள் அனுப்பியுள்ளோம்.
சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள். கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.