
ஜல்லிக்கட்டுக்கு எதிராக ‘பீட்டா’ அமைப்பு தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் புதிய ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தன்னெழுச்சி போராட்டம்
கடந்த 2014-ம் ஆண்டு மே 5-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறாத சூழல் நிலவியது.
இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் தன்னெழுச்சியாக பெருமளவில் திரண்டு போராட்டங்களை மேற்கொண்டனர்.
புதிய சட்ட மசோதா
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த ஜனவரி 21-ந்தேதி அவசர சட்டம் பிறப்பித்தது.
அதைத்தொடர்ந்து ஜனவரி 23-ந்தேதி நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதனால் அந்த மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.
முயற்சிக்கு வெற்றி
இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக் கட்டை மீட்டெடுக்க தமிழக அரசு, அரசியல் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் அயராது மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே ‘பீட்டா’ மற்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தடை விதிக்க மறுப்பு
இந்த விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றி புதிய சட்டத்திற்கு தடைவிதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
முன்னதாக, இந்த வழக்கில் பீட்டா தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு தொடர்பான தனது விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்து உள்ளது.
வீடியோ ஆவணங்கள்
தமிழகத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் (மதுரை மாவட்டம்) திருநல்லூர் (புதுக்கோட்டை), மறவப்பட்டி (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளுக்கு மருத்துவ உதவியும் ஓய்வும் அளிக்காமல் துன்புறுத்தப்படுவது இந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்திருப்பதாக, பீட்டா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சில காளைகளின் வால்களில் முறிவு ஏற்பட்டு இருப்பதுடன், கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாகவும், காளைகள் தாக்கியதில் பலர் இறந்து இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தியா உறுப்பினராக இருக்கும் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள விலங்குகளுக்கான 5 சுதந்திரங்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மீறப்பட்டு இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
‘இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டில் 19 பேர் பலி’ - ‘பீட்டா’
உச்ச நீதிமன்றத்தில் ‘பீட்டா’ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு சட்டம் இயற்றியபின், இந்த ஆண்டில் (2017) நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் 5 காளைகள் இறந்துள்ளதாகவும், வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் உள்பட 19 பேர் பலியாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
‘மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் 1948-க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் என்ற இடத்தில் ஜனவரியில் நடந்த நிகழ்ச்சியில் 2 பேர் பலியானார்கள். 129 பேர் காயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் 2 பேர் பலியானார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களும் மனுவில் இடம் பெற்றுள்ளன.