
திருச்சி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை காவலாளர்கள் கைது செய்ய வேண்டும் என்று திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 17 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் போன மாதம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா தமிழக அரசை விமர்சித்து ஒரு கேலிச் சித்திரம் வரைந்திருந்தார். அது சமூக வலைத்தளங்களில் பெரும் தாக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்ட காவலாளர்கள் ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலாவை கைது செய்தனர்.
இதனைக் கண்டித்தும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை காவலாளர்கள் கைது செய்ய வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமைத் தாங்கினார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்த இவ்வமைப்பினரை கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்கள் தடுத்து நிறுத்திய இடத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை கைது செய்ய வேண்டும், ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலாவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த பாடகர் கோவன் ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா கைதை கண்டித்து பாட்டு ஒன்று பாடினார். இதனையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த நால்வர் உள்பட 17 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றி பக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்து, பின்னர் மாலையில் அனைவரும் விடுவித்தனர்.