மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம்: கனிமொழி பெருமிதம்!
அந்த வகையில், மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நெல்லை, கோவையில் வருகிற 12ஆம் தேதியன்று காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுவார் என தெரிகிறது.
ஏப்ரல் 12ஆம் தேதி காலையில் நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்தும், அன்று மாலை கோவையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்தும் ராகுல் காந்தி பிரசாரம் செய்வார் என கூறப்படுகிறது. கோவையில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.