வளர்ந்த நாடுகளில் தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம் முன்மாதிரியாக உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வர் ஸ்டாலின், காலை சிற்றுண்டி வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். அதன்படி முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விரிவுபடுத்தப்பட்டது.
முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் கீழ், சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் தற்போது பயனடைந்து வந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
நாட்டிற்கே முன்னோடியாக திகழும் இந்த திட்டம் குறித்து பலரும் புகழாரம் சூடி வருகின்றனர். இதனிடையே, கனடா நாட்டில் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எந்த குழந்தையும் பள்ளிக்கு பசியுடன் செல்லக் கூடாது என்பதை உறுதிபடுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதாம்ர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வளர்ந்த நாடுகளில் தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம் முன்மாதிரியாக உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்த்து எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் திராவிட மாடல் அரசு உருவாக்கிய திட்டங்களின் பலன்களை எடுத்துரைக்கும் பிரசாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக, 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற ஆவணப்படத் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் பகுதியை திமுக எம்.பி. கனிமொழி இன்று வெளியிட்டார். அதில், முதல்வரின் காலை உணவுத்திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கல்வி பயிலும் நம் குழந்தைகள் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியத்துடன் தொடங்குவதை உறுதி செய்யும் நோக்கில் நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்த மகத்தான திட்டம், இன்று வளர்ந்த நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
'எல்லோருக்கும் எல்லாம்' ஆவணப்பட தொடரின் முதல் பகுதியை… pic.twitter.com/MFqtLzvwaU
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “கல்வி பயிலும் நம் குழந்தைகள் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியத்துடன் தொடங்குவதை உறுதி செய்யும் நோக்கில் நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்த மகத்தான திட்டம், இன்று வளர்ந்த நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. 'எல்லோருக்கும் எல்லாம்' ஆவணப்பட தொடரின் முதல் பகுதியை வெளியிடுவதில் மகிழ்ச்சி.” என பதிவிட்டுள்ளார்.