
திருவாரூர்
திருவாரூரில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து பெண்கள் வெற்றுக் குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஒளிமதி பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த நீர்தேக்கத் தொட்டியின் மின் மோட்டார் சரிவர இயங்காததால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் வெற்றுக் குடங்களுடன் நேற்று காலை ஒளிமதி ஓடத்துறை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் காவலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் நீடாமங்கலம் - திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.