
திருச்சி
திருச்சியில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 36 செல்போன்களை திருடிய மர்ம நபர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள சிறுகாம்பூர் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி செட்டியார். இவரது மகன் சந்திரசேகர் (43). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சி - சேலம் பிரதான சாலையில் அருகில் சிறுகாம்பூர் பிரிவு சாலையில் செல்போன் விற்பனை கடை ஆரம்பித்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு விற்பனை நேரம் முடிந்ததும் சந்திரசேகர் கடையின் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலை வழக்கம்போல கடைக்கு வந்த அவர் கடையின் கதவை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது, கடையினுள் அலமாரிகளில் அடுக்கி வைத்திருந்த செல்போன்கள் அனைத்தும் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் கடை முழுவதும் பார்வையிட்டபோது கடையின் மேற்கூரை தகரம் உடைக்கப்பட்டு இருந்தது. கடையின் மேற்கூரையை உடைத்து, அதன் வழியாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்து செல்போன்களை திருடிச்சென்றதால் சந்திரசேகர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் அரங்கநாதன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு சம்பவம் நடந்த செல்போன் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையின் தகரத்தை இரும்பு பொருட்களை கொண்டு நெம்பி அதன் வழியாக கடையினுள் சென்று திருடியுள்ளனர்,.
மேலும், இந்த சம்பவத்தில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 36 செல்போன்கள் திருட்டு போய் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வாத்தலை காவலாளர்கள் வழக்குப்பதிந்து திருடர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.