
கேரள மாநிலத்தில் ரெயிலில் 150 கி.மீ பயணம் செய்த மலைப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலைப் பாம்பு வைக்கப்பட்டு இருந்த ‘பை’ நெளியத் தொடங்கியதால், அதைப் பார்த்த பயணிகள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
சாலையில் மலைப் பாம்பு
கேரள மாநிலம், ஆழப்புழா நகரைச் சேர்ந்தவர் ஜிஜோ ஜான்(வயது29). . புத்தாண்டு கொண்டாட தனது சொந்த ஊரான எர்ணாகுளம் செல்லும்போது, பாலக்காடு அருகே சாலையில் கிடந்த ஒரு மலைப் பாம்பை பார்த்து அதை பிடித்து தனது பையில் போட்டுக் கொண்டார். காரைக்கால்-எக்ஸ்பிரஸ் ரெயிலில் மலைப்பாம்புடன் எர்ணாகுளத்துக்கு ஜார்ஜ் பயணித்தார்.
150கி.மீ பயணம்
இந்நிலையில், எர்ணாகுளத்தில் போலீசார் சோதனையிடுவதைப் பார்த்த ஜிஜோ ஜார்ஜ் தனது பையை ரெயிலில் மறந்துவிட்டு எர்ணாகுளத்தில் இறங்கி தப்பிவிட்டார். ஜார்ஜ் பயணித்த இடத்தில் மலைப்பாம்பு வைக்கப்பட்ட ‘பை’ மட்டும் இருந்தது.
பயணிகள் ஓட்டம்
அங்கிருந்து கோட்டயம் வரை அந்த ரெயிலில் 150 கி.மீ வரை பாம்பு பயணித்தது. திடீரென பாம்பு வைக்கப்பட்டு இருந்த ‘பை’ நகர்வதைப் பார்த்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அடையாள அட்டை
சம்பவம் குறித்து பயணிகள் போலீசிடம் தெரிவித்தனர். போலீசார் பையை திறந்து பார்த்த போது அதில் மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் ஜிஜோஜார்ஜின் அடையாள அட்டையும் இருந்தது. இதை வைத்து, ஆழப்புழா சென்ற போலீசார் ஜார்ஜைைகது செய்தனர்.
கறிசமைத்து விருந்து
இது குறித்து வனத்துறை அதிகாரி ரத்தீஷ் கூறுகையில், “ பாலக்காடு அருகே சாலையில் உயிருடன் இருந்த மலைப்பாம்பை பார்த்த ஜார்ஜ் அதைப் பிடித்துள்ளார். புத்தாண்டுக்கு அந்த பாம்பை கொன்று, கறிசமைத்து விருந்து வைக்கும் நோக்கில் அவர் அதை கொண்டு சென்றுள்ளார்.
மறந்தார்
வழக்கமாக இந்த ரெயில் எர்ணாகுளத்தோடு நின்றுவிடும். ஆனால், கோட்டயம் வரை நீட்டிக்கப்பட்டது ஜார்ஜுக்கு தெரியவில்லை. இதனால், எர்ணாகுளத்திலேயே ஜார்ஜ் ‘பை’யை மறந்துவிட்டு இறங்கினார்.
நெளிந்த பை
ஆனால், அனாதையாக கிடந்த பை 150 கி.மீ வரை பயணித்துள்ளது. பின் அந்த பை நகர்வதைப்பார்தது பயணிகள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் அதை போலீசார் சோதனையிட்டனர். அதில் பாம்பு இருப்பதைப் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கு முன்
அதன்பின் அந்த பாம்பை பிடித்தோம். அந்த பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து,ஆழப்புழாவில் இருந்த ஜார்ஜை கைது செய்தோம். ஜார்ஜ் பையை மறந்துவைக்காவிட்டால், அவரை கைது செய்து இருக்க முடியாது. மலைப்பாம்பை லாவகமாக ஜார்ஜ் பிடித்துள்ளதால் இதற்கு முன்பு இதுபோல் பிடித்திருப்பார் என நினைக்கிறோம்.
3 ஆண்டு சிறை
அவர் காஞ்சிரப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜார்ஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், வனவிலங்குகள் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறையும், 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.