
தேனி
என் மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த கணவனை காவலாளர்கள் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், தம்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னக்காளை மகன் ஆசைக் கண்ணன் (43).
இவரும், இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில், மனைவி தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார் ஆசைக் கண்ணன். ஆனால், அவர் வர மறுத்துள்ளார். இதனால் ஆசைக் கண்ணன் மனமுடைந்தார்.
இதனை தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை கொடுக்கச் சென்றார். அந்த மனுவை தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.
அங்கு காவல் பணியில் இருந்த காவலாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். தேனி காவல் நிலைய காவலாளர்கள் வழக்குப் பதிந்து ஆசைக் கண்ணனை கைது செய்தனர்.
பின்னர் அவரை விசாரித்ததில், “தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கவே இப்படி செய்தேன்” என்றார்.