
திருச்சி
திருச்சியில் சாலை ஓரத்தில் கொட்டிக் கிடந்த சாக்லெட்டுகள் குவியலாக கிடந்தது. அவை காலாவதியான சாக்லெட்களா? கொட்டியது யார்? என்பது மர்மமாகவே உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் கடைசிப் பகுதியில் உள்ள மதுரை சாலையில் உள்ளது கல்லாத்துப்பட்டி பிரிவு சாலை.
இந்தச் சாலையில் விதவிதமான வண்ணங்களில் அதிக அளவில் சாக்லெட்கள் கொட்டி கிடந்தன.
அதனைப் பார்த்த சாக்லெட் பேப்பர் என்று நினைத்து சிலர் கடந்து சென்றனர். சிலர் அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அது உண்மையான சாக்லெட் என்று.
மேலும், சாலையில் கொட்டிக் கிடந்த சாக்லெட் குவியல் மீது வாகனங்கள் ஏறியதால் அவை சாலையுடன் ஒட்டிக் கொண்டது.
அதேபோல் அந்த பகுதியில் உள்ள புளியமரம் அருகிலும் அதிக அளவிலான சாக்லெட்கள் கொட்டப்பட்டிருந்தது.
இங்கு சாக்லெட்கள் ஏன் கொட்டப்பட்டது? கொட்டியது யார்? என்று தெரியவில்லை. மேலும், அவை காலாவதியாகி விட்டதா? என்ற விபரமும் தெரியவில்லை.
இதுமட்டுமின்றி அந்த சாக்லெட்கள் வித, விதமான நிறத்தினால் ஆன பேப்பரில் இருந்தாலும் கூட அவற்றில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி என எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே இடத்தில் ஏராளமான சாக்லெட்கள் கொட்டப்பட்டு இருப்பதை பார்த்த மக்கள் பலரும் பல்வேறு வினாக்களுடன் கடந்துச் சென்றனர்.