
திருச்சி
டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் தலைமை தபால் நிலையத்தை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பு முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்துகின்றனர்.
அதேபோன்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் அமைப்பின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். அதற்கு காவலாளர்கள் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்த நிலையில் சமூக நீதி மாணவர் அமைப்பின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முகமது ஷரிப் தலைமைத் தாங்க மாநில செயலாளர் நூர்தீன் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த காவலாளர்கள், அவர்களை தடுத்தனர்.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 39 பேரையும் காவலாளர்கள் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.