
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கழக கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். அத்துடன், அருகில் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதில் அதிமுக 50 ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகள் புகைப்படங்களாக வைக்கப்பட்டு உள்ளன. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இதையடுத்து, இசை நிகழ்ச்சி, கவியரங்கம், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து, மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக எழுச்சி மாநாட்டின் பிரதான நிகழ்ச்சிகள் மாலையில் தொடங்கின. இதில் கலந்து கொள்வதற்காக மாலை 4 மணியளவில் மாநாட்டு திடலுக்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார்.
நீட் ரகசியம் உடைத்த உதயநிதி.. அடுத்த போராட்டம் டெல்லியில்!
இந்த நிலையில், மதுரை அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சித் தமிழர்’ என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது. மக்கள் சேவை, மக்கள் தொண்டுக்காக எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சித் தமிழர்’ என்ற பட்டம் சர்வ சமய பெரியோர்களால் வழங்கப்பட்டது. இந்த பட்டத்தில் தான் இனி அவரை அழைக்க வேண்டும் எனவும் மாநாட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா வரிசையில், புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துள்ளார். முன்னதாக, மதுரை அதிமுக மாநாட்டில், சட்டம் - ஒழுங்கு, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்காதது உள்ளிட்ட திமுக அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வைகை செல்வன், செம்மலை ஆகியோர் வாசித்தனர்.