
மதுரை,
குழந்தை உள்பட 3 பேரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு கீழ்நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்திருப்பது குறைவானது மற்றும் எந்திரத்தனமானது என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் கல்யாணி என்பவரின் வீட்டுக்குள் புகுந்து மூன்று பேர் கொல்லப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் காமராஜ் என்பவருக்கு 2013–ம் ஆண்டு கரூர் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை இரத்து செய்யக்கோரி அவர் மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:
“சம்பவம் நடந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மனுதாரரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நகைகள் தனக்கு எப்படி கிடைத்தன என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், குற்றவாளிக்கு விதித்துள்ள தண்டனை போதுமானது தானா என்பதை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆய்வு செய்யவில்லை.
கொடூரமான முறையில் குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற குற்றத்துக்காக மரண தண்டனை வழங்கலாம் என்று இந்த கோர்ட்டு உத்தரவிட முடியாது. ஆனால், தண்டனையை நிர்ணயம் செய்யும்போது, குற்றத்தின் தன்மையை நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விசாரணை ரீதியில் தண்டனை வழங்குவது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முக்கிய பணி. இந்த பணி மிகவும் கடினமானதும் கூட. இதுபோன்ற சூழ்நிலையில் சாதாரண குற்றமா, கொடூரமான குற்றமா என்பதை கவனித்து தண்டனை அளிக்கும் வகையில் நீதிமன்றத்தின் விசாரணை இருக்க வேண்டும்.
பல வழக்குகளில் மரண தண்டனைக்கான அம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் விரிவாக விளக்கியுள்ளது. உரிய தண்டனை வழங்காதது என்பது நீதி தோல்வி அடைந்ததற்கு சமம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை பொறுத்தமட்டில் போதுமான கவனம் இல்லாமல் எந்திரத்தனமாக நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
அதே நேரம் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறைவானது, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பிலோ, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலோ இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.
குற்றவாளி தான் மேல்முறையீடு செய்துள்ளார். மனுதாரருக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை உறுதி செய்யப்படுவதுடன், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.