
ஓசூர்,
ஓசூரில் இரும்பு மற்றும் எண்ணெய் கிடங்குகளில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரம் போராடினர்.
ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் வேலு. இவர் அந்த பகுதியில், பழைய இரும்பு பொருட்கள், ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய இரும்பு பொருட்கள் கிடங்கு ஒன்றை வைத்துள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை இரவு 9.30 மணி அளவில் அந்த கிடங்கில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ பரவி கிடங்கு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த தீ அருகில் உள்ள ஆயில் கிடங்கிற்கும் பரவியது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, இராயக்கோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இதில் பல இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பட்டாசுகளை சிலர் வெடித்தனர். அப்போது வைக்கப்பட்ட இராக்கெட் வெடி ஒன்று இரும்பு கிடங்கில் வந்து விழுந்ததின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அது தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.