இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்…. குழந்தைகளுக்கு மறக்காம சொட்டு மருந்து கொடுங்க!

First Published Jan 28, 2018, 7:46 AM IST
Highlights
Pulse polio camp today all over tamilnadu


இன்று தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது, இதற்கான ஏற்பாடுகளை தமிழக சுகாராத்துறை செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளன..



இன்று  காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களில் . அனைத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முதல் தவணையாக  இன்றும், 2-ம் தவணை மார்ச் மாதம் 11-ந் தேதியும் கொடுக்கப்பட வேண்டும் என அரசு குறிப்பிட்டுள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் ஆகும்.



சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளை கண்டறிய உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் டாக்டர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.



தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், சுங்கச்சாவடிகள், விமான நிலையங்கள் என 1,652 பயணவழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். பெற்றோர் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது..

click me!