பொறியியல் மாணவர்கள் அலர்ட்.. ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அறிவிப்பு.. தேர்வு அட்டவணை வெளியீடு..

By Thanalakshmi VFirst Published Jan 24, 2022, 3:46 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைகழகம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைகழகம் இன்று வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் தொடக்கம் முதல் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 30,580  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6,383 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 30,567 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 13 பேர் என 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, இறுதியாண்டு தேர்வினை தவிர அனைத்துக் கல்லூரி பருவ தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்துவது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த வாரம் அறிவித்திருந்தார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைகழகத்தின் இணைய முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம். பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் வகையில் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.கல்லூரி பருவத் தேர்வுகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தமிழக உயர்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், பாடவாரியாக தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

click me!