கடலூரில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். ஏன்? 

First Published Jun 8, 2018, 11:43 AM IST
Highlights
Public demonstration condemning electric power officials in Cuddalore Why?


கடலூர்

கடலூரில், பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மருங்கூர் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின்துறை சார்பில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றி மூலம்தான் இந்த பகுதி மக்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

மேலும், இந்த மின்மாற்றி மூலம் தெரு மின்விளக்குகள் மற்றும் குடிநீர் மின் மோட்டார்களுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலனி பகுதியில் இயங்கி வந்த மின்மாற்றி பழுதடைந்தது. இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்காமல், கிராம எல்லையில் உள்ள மற்றொரு மின்மாற்றிமூலம் காலனி பகுதி குடியிருப்புகளுக்கும், மின் மோட்டார்களுக்கும் இணைப்பை மாற்றி கொடுத்தனர்.

இந்த நிலையில் காலனி பகுதி குடியிருப்புகளுக்கு மின்மாற்றியில் இருந்து குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள டியூப் லைட், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் இயங்கவில்லை. மேலும், மின் சாதனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது. 

குறைந்த அழுத்த மின்சாரத்தால் தெருவிளக்குள் எரியவில்லை. குடிநீர் மின் மோட்டாரும் இயங்கவில்லை. இதனால் காலனி பகுதி மக்கள் மின்சாரம் இன்றியும், போதிய குடிநீர் இன்றியும் தவித்து வந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்து தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த காலனி பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க பழுதடைந்த மின்மாற்றி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். 

அதன்படி நேற்று காலை காலனி பகுதி பொதுமக்கள் பழுதடைந்த மின்மாற்றி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத மின் வாரிய அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்து சீராக மின் வினியோகம் வழங்க கோரி முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, "ஓரிரு நாட்களில் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்து, தடையின்றி சீராக மின்விநியோகம் செய்யப்படும்" என உறுதியளித்தனர். 

இதனை ஏற்ற பொதுமக்கள், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

click me!