
திருச்சி
ரேசன் கடை பணியாளர்களை பணி வரன்முறைப்படுத்தி உரிய சலுகை மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த தொழிற்சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளர்கள் அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.
இதர்கு மாநிலச் செயலாளர் அருள்சாமி தலைமை வகித்தார். திருச்சி மாவட்டச் செயலாளர் துரைசாமி வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு மாநிலப் பணியாளர் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்க ஊழியர் கூட்டமைப்புப் பொருளாளர் பட்டாபிராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், “பணி வரன்முறைப்படுத்தப்படாத பணியாளர்களை பணி வரன்முறைப்படுத்தி உரிய சலுகை மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ரேசன் கடைகளில் வருவாய்த்துறை, கூட்டுறவு துறை, பொது விநியோகத்துறை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் ஆய்வு பணிகளை மேற்கொள்வதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனையை தீர்க்க ஒரே துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
மேலும், கிடங்குகளில் இருந்து அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்டப் பொருட்களை ரேசன் கடைக்கு எடுத்து வரும்போது ஏற்படும் சேதாரங்களை விற்பனையாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதை தவிர்த்து சேதார கழிவு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஓய்வூதிய குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க ஆவண செய்வது” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.