
தேனி
கம்பத்தில் சக ஆட்டோ ஓட்டுநரின் சாதியைப் பற்றி இழிவாகப் பேசிய மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் காவலாளர்களால் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், கம்பம், 30-வது வார்டு எல்.எப்.சாலையைச் சேர்ந்த மோகன் மகன் பாலமுருகன் (27). ஆட்டோ ஓட்டுநர்.
அதேபோன்று சாமாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன்கள் ராஜசேகர் (31), சிவசக்தி (27). இவர்களும் ஆட்டோ ஓட்டுநர்கள்.
இவர்களுக்கிடையே ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்களுக்குள் முன்விரோதமும் இருந்ததாம்.
இந்த நிலையில் பாலமுருகன் ஆட்டோவில் கம்பத்திலிருந்து சாமாண்டிபுரத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜசேகர், சிவசக்தி ஆகிய இருவரும் ஆட்டோவை வழிமறித்து, பாமுருகனை தகாத வார்த்தைகளால் திட்டியும், சாதியைப் பற்றி இழிவாகப் பேசியதோடு இரும்பு கம்பியால் அடித்துள்ளனர்.
இதில், தலை மற்றும் முதுகில் பலத்த காயமடைந்த பாலமுருகன், கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், உத்தமபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அண்ணாமலை தீண்டாமை ஒழிப்பு சட்டத்திங்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், ராஜசேகரை கைது செய்தனர். சிவசக்தி தலைமறைவானதால் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.