
தேனி
தேனியில் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன், கார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏழு பேர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அருகே சித்தரேவுவைச் சேர்ந்தவர் ராஜாமுகமது மகன் சையது அலி (39). இவர், ஓசூர் இரயில்வே துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
சையது அலி தனது மனைவி பெனாசிர் பேகம் (35), மகன் ரேகன் (3), மாமியார் ஆயிஷா அம்மாள் (70) மற்றும் உறவினர்களான மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த மருத்துவர் அகமது கலில் (36), அவரது மனைவி மருத்துவர் சபீபா பர்வீன் (33), மகன் பர்கான் ஆஸிப் (5), மகள் முபிதா (2) ஆகியோருடன், திண்டுக்கல்லில் இருந்து தேனி மாவட்டம், கம்பம் நோக்கி காரில் சென்றுள்ளார்.
காரை சையது அலி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கோட்டூர் தேனி - கம்பம் நெடுஞ்சாலையில், சபரிமலையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த வேனின் டயர் திடீரென வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர் திசையில் சையது அலி ஓட்டி வந்த கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில், சையது அலி, அவரது மாமியார் ஆயிஷா அம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், காரில் சென்ற ஆறு பேர் மற்றும் வேன் ஓட்டுநர் பெங்களூருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சரவணன் (39) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வேனில் வந்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து, வீரபாண்டி காவல் நிலைய காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.