
தஞ்சாவூர்
திருபுவனத்தில் உள்ள சாயப்பட்டறை கட்டிடத்தை இடிக்கவோ, குத்தகைக்கோ, வாடகைக்கோ விடக் கூடாது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் நெசவாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் பட்டு கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் சார்பில் சன்னதி தெருவில் சாயப்பட்டறை தனிக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இதனை இடித்துவிட்டு திருச்சி கைத்தறிப் பெருவணிக வளாகக் குழுமத்தின் மூலம் பட்டு கைத்தறிக்கான வணிக வளாகம் மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.6 கோடி மதிப்பில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஓராண்டு காலமாக இதற்கானப் பணிகளைத் தொடங்க திருபுவனம் நெசவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சாயப்பட்டறை கட்டிடத்தை பார்வையிட்டார். பின்னர், அந்தக் கட்டிடத்தைத் தொழிற்பேட்டைப் பகுதியில் மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
அதனைத் தொடர்ந்து தொழிற்பேட்டையில் புதிதாக திறக்கப்பட்ட கைத்தறித்துறை உதவி இயக்குனர் புதியக் கட்டிடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். அவருடன் கைத்தறித்துறை இணை இயக்குனர் தமிழரசி, திருபுவனம் பட்டு கூட்டுறவு நெசவாளர் சங்க தலைவர் ஜோதி, துணைத் தலைவர் பாஸ்கர், நிர்வாக இயக்குனர் பெரியசாமி, கும்பகோணம் கைத்தறிதுறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஏ.வி.கே.அசோக்குமார், கே.ஜெ.லெனின், சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர்செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “திருபுவனம் பட்டு கைத்தறி கூட்டுறவுச் சங்கத்தின் வியாபார வளர்ச்சி அதிகமாகவுள்ளது. இடம் பற்றாக்குறை உள்ளதால் அந்தப் பகுதியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் புதிய வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்திற்கு வந்தபோது அவரிடம், “நெசவாளர்கள் சாயப்பட்டறை கட்டிடத்தை இடிக்கவோ, குத்தகைக்கோ, வாடகைக்கோ விடக் கூடாது” என்றும் “வணிக வளாகத்தை வேறு இடத்தில் அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி மனு அளித்தனர்.