
சிவகங்கை
சிவகங்கையை தூய்மையான மாவட்டமாக மாற்ற மக்கள் முழு மனதோடு ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க.லதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள சொர்ணகாளீசுவரர் கோவில் முன்பு பாரத சேவை ரதத்தின் தொடக்க விழா நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் க.லதா பாரத சேவை ரதத்தை தொடங்கி வைத்தார், அப்போது அவர், “தூய்மையே சேவை எனும் திட்டத்தின் கீழ் அக்டோபர் 2 வரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் நடைபெறவுள்ளன.
அரசு அலுவலர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், பெண்கள், விளையாட்டு வீரர்கள், தூய்மை பாரத இயக்கத்தினைச் சார்ந்த தூதுவர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் பங்கேற்றுத் தூய்மைப் பணிகளை மேற்கொள்வர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் போது, மக்கள் தங்களால் இயன்ற அளவு குப்பைகளைச் சேகரித்து தூய்மைக் காவலர்களிடம் வழங்கி, மாவட்டம் தூய்மைப் பெற முழு மனதோடு ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் காஞ்சனா, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, தூய்மை பாரத சேவை திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பல்த்தசார், மாவட்ட உறுப்பினர் நடாலியா ஜோசப், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புத்துரை, ரஜினிதேவி, வட்டாட்சியர் சந்தானலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், தூய்மைக் காவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன அலுவலர்கள், மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.