
தமிழகத்தில் மீதேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், காவேரி மேலான் வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இதையொட்டி திரைப்பட இயக்குனர் கவுதமன் இன்று சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் திடீர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
மேம்பாலத்தில் அனைத்து பகுதியிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு செல்ல முடியாத நிலையில், போக்குவரத்து பாதித்தது. நீண்ட நேர போராட்டத்துக்கு பின், போலீசார் அங்கு சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாலையின் நடுவில் இரும்பு சங்கலியை கட்டி பூட்டிவிட்டனர். போலீசார், கட்டப்பட்டு இருந்த மாநகராட்சியின் பிளாஸ்டிக் பேரி கார்டை உடைத்து, சங்கிலியை அப்புறப்படுத்தினர்.
பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி கலைய செய்தனர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. சாலையில் படுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
அதன்பின்னர், போக்குவரத்தை சரி செய்தனர். இதை தொடர்ந்து கத்திபாரா மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. காலை வேளையில் நடந்த இச்சம்பவத்தால், வேலைக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்வோர், சென்னை விமான நிலையம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.