பாதுகாப்புத் துறையிலும் தனியார் மயம்! பிப்ரவரி 15-ல் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் - பாதுகாப்புத் துறை ஊழியர்கள்...

First Published Jan 23, 2018, 7:09 AM IST
Highlights
Private sector in the defense sector Protest Demonstration in Parliament on February 15


நீலகிரி

பாதுகாப்புத் துறையிலும் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிப்ரவரி 15-ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்தியப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் முடிவெடுத்துள்ளது என்று அதன் அகில இந்தியச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

அகில இந்தியப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நீலகிரி மாவட்டம், அருவங்காடு வெடிமருந்துத் தொழிற்சாலை வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்தியப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் சி.ஸ்ரீகுமார் செய்தியாளர்களிடம் கூறியது:

"நாட்டில் உள்ள 41 பாதுகாப்புத் துறை தளவாட தொழிற்சாலைகள், 51 பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள், இராணுவ பொறியியல் துறை உள்பட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் 4 இலட்சம் ஊழியர்கள் பாதிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது.

தளவாட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் 650-க்கும் மேற்பட்ட கருவிகளில் 250-க்கும் மேற்பட்ட கருவிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்து அதற்கான அரசு உத்தரவையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபடுவது என தொழிற்சங்கங்கள்கள் முடிவு எடுத்துள்ளன.

அதன்படி பிப்ரவரி 15-ஆம் நாள் நாடாளுமன்றம் முன்பு பேரணி மற்றும் போராட்டமும், மார்ச் 15-ஆம் தேதி கவன ஈர்ப்பு வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெறும்" என்று அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, அகில இந்தியப் பாதுகாப்புத் துறை ஊழிர்கள் சம்மேளன சங்கத் தலைவர் எஸ்.என். பாதக், அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.

click me!