ரூ.15 இலட்சம் கோடி வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கல - வங்கி ஊழியர் சங்கம் பகிர் குற்றச்சாட்டு...

First Published Jan 23, 2018, 6:42 AM IST
Highlights
central government has not taken any effort to get debt of Rs.15 lakh crore - Bank Employees Union Accused


நீலகிரி

வங்கிகளுக்கு வர வேண்டிய ரூ. 15 இலட்சம் கோடி வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு உறுதியான  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதுவரையிலும் ஒரு ரூபாய்கூட வாராக் கடனாக வசூலிக்கப்படவில்லை என்றும் வங்கி ஊழியர் சங்கம் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது.

மாநாடு

நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் 14-வது மாநாடு உதகையில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் வி.ராஜன் தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டை அதன் பொதுச் செயலர்அருணாச்சலம்  தொடங்கி வைத்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கப் பொருளாளர் வேணுகோபால்,  தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொருளாளர் சிதம்பரம்,   

நீலகிரி மாவட்டத் தலைவர் மாயா ஜெயராஜ்,  மாவட்டச் செயலர் ராஜ்குமார்,  நிர்வாகிகள் கஜேந்திரன், லோகேஷ்வரன்,  தேவராஜ்,  கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு தொடர்பாக  தமிழ்நாடு வங்கி  ஊழியர் சம்மேளனப் பொதுச்செயலர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம்  கூறியது:

சேவைக் கட்டணம் அதிகரிப்பு

"பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. 19 பொதுத் துறை வங்கிகளை 6 வங்கிகளாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் துணை வங்கிகளை இணைத்த பிறகுதான் பாரத ஸ்டேட் வங்கிக்கு பின்னடைவு  ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வாடிக்கையாளர்களுக்கான  வட்டியும் குறைக்கப்பட்டு  வருகிறது. ஆனால், சேவைக் கட்டணம் பல மடங்கு அதிகரித்து விட்டது.

வாராக் கடன்

வங்கிகளுக்கு வர வேண்டிய ரூ. 15 இலட்சம் கோடி வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு உறுதியான  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரையிலும் ஒரு ரூபாய்கூட வாராக் கடனாக வசூலிக்கப்படவில்லை.

விஜய் மல்லையா விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது தவறான அணுகுமுறையாகும்.  12 முக்கியப் பிரமுகர்களிடமிருந்து மட்டும் ரூ. 2 இலட்சம் கோடி வாராக்கடனாக உள்ளது. உலகிலேயே  வங்கிகளில் அதிக அளவில் வாராக்கடன்  உள்ள நாடு இந்தியாவேயாகும். வாராக்கடன் உள்ள நிறுவனங்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

1 கோடி வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து

வங்கிகளில்  மக்கள் வைத்துள்ள டெபாசிட்டுகளை அவர்களது அனுமதியே இல்லாமல் எடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான மத்திய அரசின் நிதி தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீட்டு மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளது. இது மிகவும் தவறான கொள்கையாகும். இந்தியாவில் சுதந்திரத்திற்கு  பிறகு இதுவரையிலும் எந்த ஒரு வங்கியும் திவாலாகாத நிலையில்,  மக்களின் பணத்தை அனுமதியின்றி எடுப்பதை ஏற்க முடியாது.  

இதை எதிர்த்து நாடு முழுதும் 1 கோடி வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து பெற்று ஏப்ரல் மாதத்தில்  மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் கொடுக்கப்படும்.  அப்போதுதான் இதுதொடர்பான விவாதம் மக்களவைக்கு வருமென்பதால் மக்களவையில்  இதற்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

கோரிக்கை

உதகையிலுள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்பிஎப் பிலிம் தொழிற்சாலையை மீண்டும்  புனரமைத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.  

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் 50 ஆண்டு ஒப்பந்தம் முடியும்போது தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்  டான்டீயின் ஒப்பந்த காலத்தை மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.

தேயிலைத்  தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மற்ற தொழிலாளர்களுக்கு வழங்குவதைப் போலவே ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும்" என்றும் கோரிக்கைகளை வைத்தார்.

click me!