
அரியலூர்
இரத்த தானம் செய்வதை தனியார் தொண்டு நிறுவனங்களும் ஊக்கப்படுத்தி இரத்த தானம் வழங்கி இரத்தம் சேமிக்க உதவ வேண்டும் என்றுக் அரியலூர் ஆட்சியர் எஸ்.தனசேகரன் கேட்டுக் கொண்டார்.
உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரியலூரில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறை, மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை சார்பில் நேற்று விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இதனை அரியலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.தனசேகரன் தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி பிரதான சாலை வழியாக நகர் முழுவதும் சென்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிறைவடைந்தது.
பேரணி தொடங்கும் முன்பு அதிக முறை இரத்த தானம் வழங்கிய ஒன்பது பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்திய ஆட்சியர் தனசேகரன், “அரியலூரிலுள்ள அனைத்து மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இரத்த தானம் செய்ய வேண்டும்.
இரத்த தானம் வழங்குவதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இரத்தம் வழங்குவதால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று இரத்த கொடையாளர்கள் அச்சப்பட வேண்டாம்.
மேலும், இரத்த தானம் செய்வதை தனியார் தொண்டு நிறுவனங்களும் ஊக்கப்படுத்தி இரத்த தானம் வழங்கி இரத்த சேமிப்பு வங்கிகளில் இரத்தம் சேமிக்க உதவ வேண்டும்” என்றுக் கேட்டுக் கொண்டார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்பார்வையாளர் சுமதி, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி முதல்வர் ராதாகிருஷ்ணன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு பணியாளர்கள் மகேந்திரன், செல்லமுத்து, சுதா மற்றும் நம்பிக்கை மையம், சுகவாழ்வு மைய ஆற்றுநர்களும், மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.