
அரியலூர்
திமுக செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். அதனைக் கண்டித்து அரியலூரில் சாலை மறியல் செய்த திமுகவினர் 190 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தமிழகச் சட்டப்பேரவை நேற்று கூடியது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக, தனியார் தொலைக்காட்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் அளித்த வாக்கு மூலம் விவகாரம் குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை பேரவைத் தலைவர் தனபால் நிராகரித்தார்.
இதனையடுத்துத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து தடாலடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதனைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைதை கண்டித்து, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கரன் தலைமையில் 70 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல் திருமானூரில் 25 பேர், கீழப்பழுவூரில் 15 பேர், உடையார்பாளையத்தில் 15 பேர், செயங்கொண்டத்தில் 30 பேர், தா.பழூரில் 35 பேர் என மாவட்டத்தில் 190 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.