சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருக்கு வயது 24. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்றிரவு 11.30 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில், காசி தியேட்டர் அருகே மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தார்.
இரவு 1 மணியளவில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அவரை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவரது உடல்நிலை மோசமாகவே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டார். அதன்பின் மேல் சிகிச்சையாக ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுய நினைவை இழந்த முத்துகிருஷ்ணனை நேரில் வந்து சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், அவருக்கு தேவையான சிகிச்சையை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதே போன்று அயனாவரம் ஐசிஎப் அருகே மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மின்சாரம் தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.