
நாமக்கல்
கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக கதிராமங்கலத்தில் போராடி கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் நேற்றுக் காலையில் திரளாக கூடினர்.
அங்கு அவர்கள், “விவசாயத்தை காக்க வேண்டும்,
கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,
கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்ததும், திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் காவலாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தவறு எனக் கூறி மாணவர்களை கலைந்துச் செல்லுமாறு கூறினர்கள்.
இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்ததால் காவலாளர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கல்லூரி பேருந்துகளில் ஏற்றிக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இப்போராட்டம் குறித்து கல்லூரி மாணவர்கள் கூறியது:
“ஒ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். விவசாயத்தை வாழ வைக்க வேண்டும். 90 நாள்கள் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை சரியானதல்ல. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களாகிய நாங்கள் அறவழிப் போராட்டம் நடத்தினோம். ஆனால், எங்களை வலுகட்டாயமாக பேருந்துகளில் ஏற்றி போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்” என்று அவர்கள் கூறினர்.
போராடிய மாணவர்கள் “தமிழன்டா” என்ற வாசகத்துடன் கூடிய அட்டைகளை கைகளில் வைத்திருந்தனர் என்பது கொசுறு தகவல்.