
திருநெல்வேலி
திருநெல்வேலியில் அனுமதியின்றி இயக்கப்படும் தனியார் பேருந்துகள், லாரிகள் பல்வேறு விபத்துகளுக்குக் காரணாமாக இருக்கின்றன. எனவே, இவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஜனநாயக மக்கள் கட்சியினர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.
தமிழக ஜனநாயக மக்கள் கட்சியினர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அப்துல்ஜப்பார் தலைமை வகித்தார். பொருளாளர் சாந்தி ஜாபர் முன்னிலை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜமால் போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
இந்தப் போராட்டத்தின்போது, விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிற நோயாளி போல் வேடம் அணிந்த ஒருவரை தூங்கி வந்தனர். அப்போது கோரிக்கையை வற்புறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் ஆய்வாளர்கள் வேல்கனி, தில்லைநாகராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரைச் சந்தித்து மனுளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அந்த மனுவில், “நெல்லை மாநகர பகுதியில் அதிகமான தனியார் பேருந்துகள், லாரிகள் அனுமதியின்றி இயக்கப்படுகிறது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை மாநகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு ஆய்வாளர் நியமனம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.