ராமேஸ்வரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைத்து, ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்து, தமிழக அரசுக்கு மருத்துவ கல்வியை தமிழில் வழங்க கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி பாம்பன் பலத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். அதன்பிறகு தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டை அணிந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
கோவில் தரிசனம் முடிந்த பிறகு பிரதமர் மோடி, அங்கு இருந்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட விழா மேடைக்கு வந்தார். கோவிலில் இருந்து விழா மேடை வரையிலும் பிரதமருக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பிறகு பிரதமர் விழா மேடைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் திருவள்ளூவர் சிலையை பிரதமருக்கு பரிசளித்தனர். அதேபோல் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோடிக்கு ராமரின் பட்டாபிஷேக ஓவியத்தை வழங்கினார்.
இதையும் படிங்க: கடவுளே! நல்லபடியா வைப்பா! ராமநாத சுவாமி கோவிலில் மனமுருகி வேண்டிய பிரதமர் மோடி!
இதனையடுத்து பிரதமர் மோடி நிகழ்ச்சியில் வணக்கம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். என் அன்பு தமிழ் சொந்தங்களே, இன்று ராம நவமி நாள். சற்றுநேரம் முன்பு தான் அயோத்தி ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் தெரிந்தன. தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டிருக்கிறது.
முதல் செங்குத்து பாலம்
இன்று ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இந்த ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தமிழ்நாட்டின் இணைப்புத்திறனை வலுப்படுத்தும். ராமேஸ்வரம் பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்த பூமியாகும். அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்று அவரது வாழ்க்கை நமக்கு காட்டுகிறது. பாம்பன் பாலம் தான் இந்தியாவின் முதல் செங்குத்து பாலம். இதற்கடியில் பெரிய கப்பல்களாலும் பயணத்தை மேற்கொள்ள முடியும். ரயில்களும் இதன்மீது விரைவாக பயணிக்க முடியும்.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன?
தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி
2014க்கு முன்பு ரயில்வே துறையில் குறைவாகவே தமிழ்நாட்டிற்கு நிதி கிடைத்தது. அப்போதெல்லாம் கூட்டணியில் யார் இருந்தார்கள் என நான் சொல்லத் தேவையில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 3 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கும் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதியை வழங்கியுள்ளோம். இதெல்லாம் செய்த பிறகும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அழுவதற்கு மட்டுமே தெரியும். அழுது விட்டு போகட்டும்.
மலிவு விலையில் மருந்துகள்
தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்ட மூலம் ஒரு கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். மருந்துகள் வாங்க வேண்டுமென்றால் மக்கள் மருந்தகத்தில் வாங்குங்கள். மக்கள் மருந்தகங்களில் 80 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. தமிழகத்தில் 1400 க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை
மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். மருத்துவ படிப்பை தமிழில் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது பெரும் ஆசை.
ஏழை மக்களுக்கு 12 லட்சம் வீடுகள்
தமிழகத்தில் ஏழை மக்களுக்காக 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேலான குடும்பங்களுக்கு குழாய் வழியே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராஜகண்ணப்பன் இருவரையும் மேடையில் வைத்துக்கொண்டே தமிழக அரசை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.