நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விசைத்தறி தொழிற்கூடங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 400 கோடி வரை இழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறித் தொழில் பிரதானமாக உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, விருதுநகர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. விசைத்தறி தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது, விசைத்தறி தொழிலில் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கி வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு வழங்கவில்லை. இந்தநிலையில், ஊதிய கூலி உயர்வு ஒப்பந்தம் சமீபத்தில் இறுதி செய்யப்பட்டது. அதன்படி சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதம் மற்ற இதர ரகங்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கூலி உயர்வு அமல்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் இழுத்தடித்து வந்தனர்.
இதனால் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தங்கள் விசைத் தறிகளை நிறுத்திக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தினமும் ரூ. 50 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்றுவுடன் கூடிய 8-வது நாளில் ரூ. 400 கோடி துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், சுல்தான்பேட்டை ஒன்றியத்தின் ரூ. 12 கோடி உற்பத்தி இழப்பும் அடங்கும்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய தொழில்களில் ஒன்றான விசைத்தறி தொழில் வேலைநிறுத்தம் காரணமாகச் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட் டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளதுடன் சற்று பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், அதிகாரிகள் என முத்தரப்பில், நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட கூலி உயர்வைத் தாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுல்தான்பேட்டை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.