Thaipusam 2022 : தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி இல்லை... அரசு கறார்.. பக்தர்கள் ஏமாற்றம்..

By Raghupati RFirst Published Jan 18, 2022, 7:39 AM IST
Highlights

தைப்பூசம் உலகெங்கும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.இந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தமிழக அரசு தைப்பூசம் அன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்து இருக்கிறது.

மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 18 வரை வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் மலைக் கோயில் அடிவாரத்தில் தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அதேபோல,  தைப்பூசமான இன்று  மாலை 4.45 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் கோயில் ஊழியர்களை மட்டும் வைத்து முதன்முறையாக சிறிய மரத் தேரில் தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று பக்தர்கள் இன்றி மிகவும் எளிமையாக நடைபெற்று வருகிறது. 

இன்று  காலை 6 மணி, 10, நண்பகல் 1, இரவு 7, 10 மற்றும் மறுநாள் காலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று (ஜன.17) காலை 7.30 மணி தருமச்சாலையிலும், 10 மணி அளவில் சத்திய ஞான சபையில் கொடியேற்றம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகம் செய்து வருகிறது. கரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சபை வளாகத்தில் கரோனா விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் மற்றும் தைப்பூச பண்டிகை நாட்களில் நேரடி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  எனினும் பொங்கலையொட்டி ஊரகப்பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களுக்கு மட்டும் பக்தர்கள் நேரில் சென்று வழிபட்டனர். அங்கும் கொரோனா வழிமுறையை பின்பற்றி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாவிட்டாலும் கோவில்களில் வழக்கம்போல் பூஜைகள் நடந்தன.தைப்பூசம் அன்றும் பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படாததால் , பக்தர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

click me!