
பொன்மாணிக்கவேல் பேட்டி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் முன்னாள் ஐ. ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று அறிக்கை ஒன்றை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய அவர், ‘ஒலக்கூர் அகத்தீஸ்வரர் கோவில் கி. பி. 9-ம் நூற்றாண்டில் ராஜராஜசோழனின் பேரன் 2-ம் ராஜேந்திரதேவனால் கட்டப்பட்டுள்ளது இந்த கோவிலில் உள்ள பழமைவாய்ந்த 7 கல் விக்ரகங்கள் 50 ஆண்டுகள் முன்பு வரை பயன்பாட்டில் இருந்தது.
தற்போது மூலவர் அகத்தீஸ்வரர், கல் நந்தி மட்டுமே உள்ளது. அகத்தீஸ்வரர்கோவிலில் இருந்த 5 சிலைகளை பாதுகாப்பாக வைக்க இந்து சமய அறநிலைய அதிகாரிகளால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் அந்த 5 சிலைகள் இதுவரைக்கும் மீண்டும் அந்த கோவிலில் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக 5 சிலைகளும் சென்னை, மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது.
சிலை திருட்டு
அதனை ரூ. 70 லட்சத்திற்கு விற்று விட்டனர். இந்த கோவிலின் வடக்கு, கிழக்கு, தெற்கு கோபுரங்களில் ஏராளமான கல்வெட்டுகள் சிதைவடைந்த நிலையில் உள்ளது. இதை அறநிலைய துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கோவிலின் தொன்மையும், மதிப்பும் அறியாமல் செயல்பட்டு உள்ளனர். கிராம மக்கள் இல்லையென்றால் ஒலக்கூர் கிராமத்தில் அகத்தீஸ்வரர் என்ற சோழர் காலத்து கற்கோவில் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போயிருக்கும்.
5 சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. அரசு, நீதித்துறை மற்றும் கிராம மக்களுக்கு தெரியாமல் சிலைகள் கடத்தப்பட்ட சம்பவம் மறைக்கப்பட்டு, குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரை தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரித்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டுள்ள பழம்பெரும் சிலைகள் மீட்டு வரப்படும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க : ஆதார் ஜெராக்ஸ் கொடுக்காதீங்க.. உஷாரா இருங்க.! மத்திய அரசு எச்சரிக்கை - எதற்கு தெரியுமா ?
இதையும் படிங்க : ராமதாஸ், அன்புமணி செஞ்ச துரோகம்..வன்னிய சமூகம் சும்மா விடாது - காடுவெட்டி குரு மகள் ஆவேசம் !