K.C Palanisamy : கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள சம்பவம், இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் அருந்திய 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. திரை நட்சத்திரங்களும், அரசியல் பிரபலங்கள் பலரும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சுழலில் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் MP கே.சி பழனிசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்.. "இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு 13.05.2023 அன்று இதே போல் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் மரணம் அடைந்தார்கள். "இதற்கு பிறகு இதுபோன்று நிகழாது" என்றும் "கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும்" முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்".
"ஆனால் சரியாக 13 மாதங்களில் மீண்டும் ஒரு விஷச்சாராய நிகழ்வு 35 மரணம் என்கிற பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இதற்க்கு பொறுப்பேற்கவேண்டும். அதிகாரிகளை மட்டும் பொறுப்பாளிகளாக்க முயற்சிக்க கூடாது. ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த விஷச்சாராயத்தை அருந்தியிருக்கிறார்கள் என்றால் நிச்சியமாக காவல் துறைக்கு தெரிந்து தான் இந்த விஷச்சாராய வியாபாரம் நடந்திருக்கும்".
"கள்ளக்குறிச்சி மட்டும் அல்ல தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராய வியாபாரிகளை காவல் துறைக்கு நன்கு தெரியும். காவல்துறை அதிகாரிகள் நினைத்தால் ஒரே நாளில் இதை கட்டுப்படுத்த முடியும். எனவே காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கிற முதல்வர் ஸ்டாலின் இதை கட்டுப்படுத்த மனம் இல்லை என்று தான் நினைக்கத்தோன்றுகிறது".
"மாவட்ட அளவில் இருக்கிற ஒருசில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. மாநில அளவில் பல பிரிவின் உயரதிகாரிகள் என்ன செய்தார்கள்? இதை விட பேராபத்தாக குட்கா, Cool Lip போன்ற போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு பட்டிதொட்டியெங்கும் இளைஞர் சமுதாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறது இது குறித்து (16.02.2024 ) அன்றே சுட்டிக்காட்டினோம். அதேபோல் TASMAC பார்களை தவிர கிராமம் தோறும் பெட்டிக்கடைகளில் முதற்கொண்டு 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இதுகுறித்தும் ( 05.04.2024 ) அன்றே சுட்டிக்காட்டியுளோம், இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை".
"இந்த அரசாங்கம் வந்ததன் பிறகு தமிழ்நாடு கிட்டத்தட்ட போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் அதிகம் புழங்கும் மாநிலமாக மாறிவிட்டது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எல்லாரையும் கண்டறிந்து மாவட்டவாரியாக அனைவர்மீதும் குண்டாஸ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவாரா முதலமைச்சர் திரு.ஸ்டாலின்?"
"காவல் துறை என்பது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறை. திமுக ஆட்சிக்கு வந்தாலே காவல்துறையின் செயல்பாடுகள் முடங்கிவிடுகிறது என்கிற குற்றச்சாட்டு உண்மை என்பதை மீண்டும் இந்த அரசு நிரூபித்திருக்கிறது" என்று மிகவும் கட்டமாக பேசியுள்ளார்.
கள்ளச்சாராய மரணத்திற்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? சீமான் காட்டம்