AV Raju Apology : பிரபல நடிகை குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட ஏ.வி ராஜுவிற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் உள்ள எஸ்டேட்டில் அதிமுக நிர்வாகிகள் 100 பேர் சுமார் ஒரு வாரம் தங்கி இருந்த நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வரும் நடிகை ஒருவர் அங்கு அழைத்து வரப்பட்டதாகவும். பிரபல நடிகர் ஒருவர்தான் அவரை அங்கு அழைத்து வந்தார் என்றும், பரபரப்பு தகவல் ஒன்றை அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் ஏ.வி ராஜு வெளியிட்டு இருந்தார்.
மேலும் அந்த நடிகைக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அவர் பேசி இருந்தார். இந்த நிலையில் இது தமிழகமெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கோலிவுட் உலகை சேர்ந்த பலரும் ராஜூவுக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வந்தனர். அந்த பிரபல நடிகையும் இந்த விஷயம் குறித்து தனது கண்டனத்தை எழுப்பினார்.
மேலும் நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள ஏ.வி ராஜு பல்டி அடிக்கும் விதமாக ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.
தான் "அந்த பிரபல நடிகையை போல இளம் நடிகைகளை தான் அவர் கேட்டார்" என்று கூறியதாகவும், எந்த நடிகைகையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். நான் எப்பொழுதும் அவ்வாறு பேசுபவன் இல்லை என்றும், தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் இந்த விவகாரத்தில் ஏவி ராஜுவுக்கு எதிராக குரல் எழுப்பி இருந்த நிலையில், காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.