
விஜயகாந்த் பிறந்தநாள் விழா
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் 71வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கவுள்ளார். இந்தநிலையில் விஜயகாந்த் பிறந்தயாளையொட்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இன்று பிறந்தநாள் விழா காணும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, தொடர்ந்து நாட்டிற்கு நற்பணியாற்றிட எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார். சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அன்பு சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்கள், தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சசிகலா வாழ்த்து
தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், தங்களின் ஈடு இணையற்ற பங்களிப்பால், இத்தமிழ் சமூகத்திற்கு தாங்கள் ஆற்றுகின்ற மக்கள் நலப் பணிகள், எந்நாளும் தொடர்ந்திடவும், தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.