பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடக்கம்.!திருக்குவளை பள்ளியில் மாணவர்களோடு உணவு அருந்திய மு.க.ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Aug 25, 2023, 9:17 AM IST

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். 


பள்ளி மாணவர்களுக்கான சத்து உணவு திட்டம்

மாணவர்களின் கல்வி இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் மதிய உணவு திட்டம் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இதன் விரிவாக்கத்தை எம்ஜிஆர் செயல்படுத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மதிய உணவு திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். இதன் அடுத்த கட்ட முயற்சியாக காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

காலை உணவு திட்டம்

இதனையடுத்து முதலில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு (2022) அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதியன்று மதுரை சிம்மக்கல், ஆதிமூலம் ஆரம்பப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் ஆகஸ்டு 25-ந் தேதி  முதல் அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார்.

 

 

இதன் படி இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி காலை உணவாக பள்ளி மாணவர்களுக்கு ரவா உப்புமா, அரிசி உப்புமா, சேமியா உப்புமா, வெண் பொங்கல், ரவா பொங்கல், கோதுமை ரவா உப்புமா, காய்கறிச் சாம்பார் போன்ற உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை ரவா கேசரி அல்லது சேமியா கேசரியும் வழங்கப்படவுள்ளது. இந்தநிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் திருக்குவளை பள்ளியில் இன்று  நடந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார்.

மாணவர்களோடு உணவு அருந்திய ஸ்டாலின்

அப்போது  பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறினார். அதனை தொடர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து முதல்-அமைச்சர் உணவு சாப்பிட்டார். மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கு தினமும் வருவீங்களா.? எப்படி படிக்கிறாய் என்று மாணவர்களின் உரையாடினார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு சாக்லெட் வழங்கினார். 
 

click me!