
பைனான்ஸியர் அன்புச்செழியன் உதகையில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, நீலகிரியில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அன்புச் செழியன் உதகையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதை அடுத்து தனிப்படை போலீஸார் உதகையில் முகாமிட்டு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாகத் தேடி வருகின்றனராம்.
முன்னர், திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் ஹைதராபாத்தில் பதுங்கிஇருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து தனிப்படை போலீஸார் ஹைதராபாத்துக்குச் சென்றனர். அங்குச் செல்வதற்குள் அன்புச்செழியன் அங்கிருந்து தப்பி பெங்களூருவுக்குப் பறந்துவிட்டாராம். இந்நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பிய போலீஸாருக்கு அன்பு பெங்களூரில் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பெங்களூருவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், அன்பு அங்கிருந்தும் தப்பி, மைசூர் வழியாக உதகைக்கு வந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உதகையில் அவர் எங்காவது தங்கியிருக்கக் கூடும் என்று நீலகிரி மாவட்ட போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். உதகையில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்பட நடிகர், நடிகையருக்குச் சொந்தமான பங்களாக்கள் பல உள்ளன. அன்புச்செழியன் சிலருக்கு வில்லனாகத் தெரிந்தாலும், பலருக்கு அவர் கைகொடுத்து காப்பாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே, திரைத்துறையினரைப் பொறுத்த வரை, அவருக்கு ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். இதனால், அவர்களுக்குச் சொந்தமான அல்லது தெரிந்தவர்களின் பங்களாக்களில் அன்பு இருக்கக் கூடும் என்ற ரீதியில் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், தமிழக-கர்நாடக எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய ரிசார்ட்டுகள் எதிலாவது அன்பு தங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, அதையும் மனதில் கொண்டு தனிப்படை போலீஸார் உதகையில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.