
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஓசூர் என்ற மலைக் கிராமத்தில் அரசு பள்ளிக்கட்டடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த பள்ளி வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்காக, கோபி செட்டிபாளையம் பகுதியிலிருந்து ரிக் லாரியை ஓட்டுனர் செல்வராஜ் என்பவர் ஓட்டிசென்றுள்ளார்.
மலைப்பாதையில் செல்லும்போது, மணியாச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள வளைவில் லாரியை திருப்ப முயன்றார்.
அப்போது, ஓட்டுனர் செல்வராஜின் கட்டுபாட்டை இழந்த லாரி, அங்கிருந்து 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், புதுக்கரை புதூர் பகுதியினைச் சேர்ந்த மாணிக்கராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மலைவாழ் மக்கள் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பலத்த காயமடைமந்த ஓட்டுனர் செல்வராஜ் உட்பட 6 பேரை மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.