
சென்னையில் வீட்டில் தனியாக உள்ள முதியோரை கண்காணிப்பதற்காக மாநகர காவல்துறை சார்பில் இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 4,600 முதியோர்கள் ஆதரவின்றி வீட்டில் தனியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 2,500 பேர் காவல்துறையிடம் கண்காணிப்புக்கோரி பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தனியாக உள்ள முதியோர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மாநகர காவல்துறை சார்பில் 1253 என்ற அவசர இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனிமையில் உள்ள முதியோர்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம் என்றும், முதியோர்களை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உதவி ஆய்வாளர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் தனியாக வசிக்கும் முதியவர்கள் நகை, பணத்திற்காக அடிக்கடி கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து காவல்துறை இந்த இலவச தொலைபேசி சேவையை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.