
மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இன்று இடிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம், பள்ளிகளுக்கு விடுமுறை என அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இதேபோல் எண்ணூர் அனல்மின் நிலையம் இடிக்கப்பட்டது. தற்போது, இந்த கட்டிடம் இடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிக்கும் பணி குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி கூறுகையில், இந்த கட்டிடம் உள்நோக்கி இடிந்து விழும் வகையில் நவீன உள்வெடிப்பு தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பான முறையில் தகர்க்கப்பட உள்ளது.
இதற்காக மருத்துவர்கள், பொதுப்பணித்துறை, வருவாய்துறை என அனைத்து தரப்பினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். கட்டிடம் இடிக்கும் பணி முடிவடைந்த பிறகு அவர்கள் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றார்.
கட்டிடத்தை தகர்க்கும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொன்லிங்கம் கூறியதாவது:–
நாற்காலி போல், எந்த பகுதியை தூக்கினால் சாயுமோ அது போல் கட்டிடத்தின் சாய்ந்த பகுதியில் வெடிக்க செய்துள்ளோம். கட்டிடத்தை தகர்க்க ஜெலட்டின், அமோனிய நைட்ரேட், கன் பவுடர், ஆர்.டி.எக்ஸ். போன்ற அனுமதிக்கப்பட்ட வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
வெடிமருந்துகள் அனைத்தும் மின்சார இணைப்பை துண்டித்த பிறகு இன்று துளையிடப்பட்ட தூண்களில் நிரப்பப்படும். ஏனெனில் மின் வெளிச்சம் காரணமாக அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இடி, மின்னல் காரணமாக பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இரவு நேரத்தில் வெடிமருந்தை வைக்கும் பணி நடைபெறாது.
நீருக்கு அடியில் கூட இந்த வெடிமருந்தை பயன்படுத்த முடியும். எனவே மழை வந்தாலும் கட்டிடத்தை தகர்ப்பதில் எந்தவித தடையும் இருக்காது. கட்டிடம் வெடிக்கப்பட்டு சுமார் 10 நிமிடங்களில் புகை மண்டலம் மறைந்து விடும். இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த சத்தம் தீபாவளி பட்டாசு வெடிக்கும் சத்தம்போல் தான் இருக்கும்.
இந்த கட்டிடத்தை சுற்றியுள்ள 124 வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படுகிறது.
ஆபத்தான அடுக்குமாடி கட்டித்தை தகர்க்கும் பணி இன்று மதியம் நடக்கிறது. இதனால் அந்த கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள 124 வீடுகளில் உள்ளவர்கள் இன்று காலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்கள் இலவச பஸ்கள் மூலம் ஏற்றி செல்லப்பட்டு மதனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், கட்டிடம் இடிக்கும்போது, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும், இன்றும் அந்த பகுதியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி செல்லும் வாகனங்கள் மதனந்தபுரம் வழியாகவும், குன்றத்தூரில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் பாய்கடை வழியாக பட்டூர் கூட்டு சாலைக்கு சென்று போரூர் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கட்டிடத்தை இடிக்கும்போது அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் தகர்க்கப்படுவதற்கு முன்பு போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேறி விட்டார்களா? என உறுதி செய்யப்படும். அதன் பிறகே கட்டிடம் வெடிவைத்து தகர்க்கப்படும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பலவீனமான புகைபோக்கியை நவீன உள்வெடிப்பு முறையில் தகர்க்க பயன்படுத்தினோம். அதன் பிறகு குடியிருப்புக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை இந்த முறையில் முதன் முதலாக தகர்க்க உள்ளோம். வடமாநிலங்களிலும், மேலை நாடுகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர் என்றனர்.