
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்த இடமென்று கூறப்படும் பவழக்குன்று மலை புனிதமான இடங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இதை நித்யானந்தா சுவாமிகளின் ஆட்கள் ஆக்கிரமிக்க முயற்சிப்பதில்தான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்டவர் நித்யானந்தா. இவர், 14 வது வயதில் திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலைக்கு பின்புறம் உள்ள ஒரு பாறையில் அமர்ந்திருந்தபோது, ஞானமடைந்ததாக அவரின் சீடர்கள் கூறுகின்றனர்.
பவழக்குன்று மலை உச்சியில் நித்தியானந்தம் அண்ணாமலையார் அருள் பெற்றதாக கூறி அந்த குன்றை ஆக்ரமிக்க கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள் நித்தியானந்தாவின் சீடர்கள். இதனை முறியடிக்கும் முயற்சியில் அப்பகுதி மக்களும் சி.பி.எம். இணைந்து தடுத்து வருகின்றனர்.
பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்கும் நித்தியானந்தரின் சீடர்கள் குறித்து, சிபிஎம் கட்சியினர் அம்மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். புகாரை அடுத்து, சம்பவ இடத்துக்கு போலீசாருடன் கோட்டாட்சிய உமா மகேஸ்வரி சென்று நித்தியானந்தர் சீடர்களுடன் பேசினார்.
ஆனால், கோட்டாட்சியரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நித்தியானந்தரின் சீடர்கள் காலி செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். மேலும், கோட்டாட்சியர் உமா மகேஸ்வரியை ஒருமையில் பேசியும், சாபமும் விட்டுள்ளனர். இதனை படம் பிடித்த செய்தியாளர்களுக்கும் நித்தியானந்தரின் சீடர்கள் சாபம் விட்டனர்.
இதனை அடுத்து, கோட்டாட்சியர் உடன் சென்ற போலீசார் பவழக்குன்று மலையில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது. அது மட்டுமல்லாது நித்தியானந்தரின் சீடர்களையும் விரட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.