ஆயுதப்படை போலீஸ்காரர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை - சந்தேகத்தால் நடந்த விபரீதம்

First Published Jun 16, 2017, 1:21 PM IST
Highlights
The policeman committed suicide by hanging with his wife because of Suspicion


ஆயுதப்படை போலீஸ்காரர், தனது மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தனது நண்பருக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ அனுப்பி உள்ளார். பரபரப்பு கடிதமும் சிக்கியது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்தவர் பாலுதேவர். இவரது மகன் சவுந்திரபாண்டியன் (27). சென்னை வேப்பேரியில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த சசிகலா (23). இவருக்கும், சவுந்திரபாண்டியனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், சசிகலா, கணவருடன் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து சவுந்திரபாண்டியன், சென்னையிலேயே காவலர் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 3 மாதத்துக்கு முன் இருவரின் பெற்றோர்களும் சமரசம் பேசினர். அப்போது, தம்பதிக்கு அறிவுரை கூறி, ஒன்றாக வாழவேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து, திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் தனிக்குடித்தனம் வைத்தனர். ஆனாலும், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 12ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது விரக்தியடைந்த சசிகலா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை, உறவினர்கள் மீட்டு, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் சசிகலா வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று காலை சவுந்திரபாண்டியன், தனது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ காட்சி அனுப்பினார்.

அதில், சவுந்திரபாண்டியன் ‘‘எனக்கும், என் மனைவிக்கும் வாழ பிடிக்கவில்லை. எங்களது சாவுக்கு காரணம் மாமா ஆறுமுகம், அவரது மனைவி பிரேமா, சசிகலாவின் சித்தப்பா கிருஷ்ணன், அவரது மனைவி ரஞ்சிதம், அம்மாஞ்சி ஐயா ஆகியோர்தான். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை அம்மா மன்னிக்க வேண்டும்’’ என பேசியது தெரிந்தது.

உடனே அந்த நண்பர், சவுந்திரபாண்டியனின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அனைவரும் அலறியடித்துக் கொண்டு சென்றனர். அங்கு கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஒரு அறையில் சவுந்திரபாண்டியன் தூக்கில் சடலமாக கிடந்தார்.

மற்றொரு அறையில் சசிகலா தூக்கு போட்டு, அந்த கயிறு அறுந்து கீழே சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சசிகலாவின் முகத்தில் பலத்த காயம் இருந்தது. இதனால், மனைவியை அடித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு, பின்னர் சவுந்திரபாண்டியன் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தகவலறிந்து எண்ணூர் போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கடந்த 12ம் தேதி சசிகலா தற்கொலைக்கு முயன்றபோது, எண்ணூர் போலீசார் அவரிடம் விசாரித்தனர். அதில், ‘‘திருமணம் ஆன நாள் முதல், எனது கணவருக்கு என் மீது சந்தேகம் இருந்தது. இதனால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு என்னை அடித்து உதைத்தார். அவரின் சந்தேக புத்தியால் நான் தற்கொலைக்கு முயன்றேன்’’ என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் போலீசார்த, சவுந்திரபாண்டியனின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, சவுந்திரபாண்டியன் எழுதி வைத்த கடிதம் சிக்கியது.

அதில், ‘‘எல்லோருக்கும் வணக்கம். நான் போலீசாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு இனிமேல் வாழ்வதற்கு முடியவில்லை. என்னுடைய சாவிற்கும், சசிகலாவின் சாவிற்கும் காரணம் எனது மாமா ஆறுமுகம், அவரது மனைவி பிரேமா.

முக்கியமாக என் மனைவியின் சித்தப்பா கிருஷ்ணன், அவரது மனைவி ரஞ்சிதம், அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் கார்த்தி, ஸ்ட்லீடி மற்றும் என் மனைவியின் அம்மாச்சி, அப்பா ஆகியோரே எங்களுடைய சாவிற்கு காரணம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு பா.சவுந்திரபாண்டியன்’’ என எழுதப்பட்டு இருந்தது.

click me!