இது தப்பு சார்! கேள்விகேட்ட இளைஞர்களை காட்டுமிராண்டி தனமாக தாக்கிய போலீஸ்; போராடிய மக்களுக்கும் தடியடி...

Asianet News Tamil  
Published : Feb 12, 2018, 09:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
இது தப்பு சார்! கேள்விகேட்ட இளைஞர்களை காட்டுமிராண்டி தனமாக தாக்கிய போலீஸ்;  போராடிய மக்களுக்கும் தடியடி...

சுருக்கம்

Police brutally attacked youths who questioned and attacked people who protest

திருச்சி

திருச்சியில் வாகனச் சோதனையின்போது பட்டதாரி இளைஞர்களை தீவிரவாதி என்று கூறி காட்டுமிராண்டித் தனமாக தாக்கிய காவல்துறையினரின்  தவறை தட்டிக்கேட்க போராட்டம் நடத்திய மக்கள்  மீது தடியடி நடத்தி காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், உய்யக்கொண்டான் திருமலை அருகிலுள்ள செங்கதிர்ச்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (26). எம்.டெக். பட்டதாரியான இவர், தனது நண்பர் பொறியியல் பட்டதாரி பாலச்சந்திரனை அழைத்துக்கொண்டு நேற்று இரவு புத்தூர் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார்.

இவர்கள், வயலூர் சாலையிலுள்ள காவல் சோதனைச் சாவடி பகுதியில் சென்றபோது அங்கு சோதனைப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கோபால், மோட்டார் சைக்கிளை நிறுத்தி தலைக்கவசம் ஏன் அணியவில்லை? என்று கேட்டு, அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்டுள்ளார்.

அதற்கு ஓட்டுநர் உரிமம் வீட்டில் இருப்பதாகவும், அதை எடுத்து வருவதாகவும் கூறிச் சென்ற இருவர், மீண்டும் சோதனைச் சாவடிக்கு வந்தனர். அப்போது, அபராதத் தொகை குறித்த பில் தரும்போது, கார்பன் அடித்தாள் இல்லாமல் அபராதம் விதிப்பது ஏன்? என்று இருவரும் கேட்டனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் கோபால் இருவரையும், "என்னையே கேள்வி கேட்கிறீர்களா? என்று மிரட்டி அவர்கள் இருவரையும் பலமாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து இருவரும் அங்கிருந்த ஓடியதால் மற்ற காவலாளர்கள் அவர்களைத் விரட்டிச் சென்று காட்டுமிராண்டித் தனமாக தாக்கியுள்ளனர்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பகுதி மக்கள் கேட்டபோது, அந்த மாணவர்களை தீவிரவாதிகள் என்று கூறி மழுப்பியுள்ளனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த மக்கள் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை தாக்கிவிட்டு தீவிரவாதி என்று சப்பைக்கட்டு கட்டுகிறீர்களா? என்று தட்டி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட மக்கள், "இளைஞர்களைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினர். இதையடுத்து கூட்டத்தை கலைப்பதற்காக கூடியிருந்த காவலார்கள் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை விரட்டி அடித்தனர்.

போலீஸாரின் அராஜகத்தை தட்டிக்கேட்க ஊர் மக்களை ஒன்று கூட்டி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை..!
திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!