மாணவியை இரக்கமற்ற மனித மிருகம் உடல்ரீதியாக வன்கொடுமை! காவல்துறையோ மனரீதியாக வன்கொடுமை! அன்புமணி!

By vinoth kumar  |  First Published Dec 26, 2024, 6:59 PM IST

Anbumani Ramadoss: காவல்துறையின் இந்த செயல் பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் சோர்வடையச் செய்யும் நோக்குடன் செய்யப்பட்டதா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை, அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்னொருவரை பாதுகாக்கும் நோக்கத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் சோர்ந்து போகச் செய்யும் நோக்குடன் தான் காவல்துறை இவ்வாறு செய்கிறதா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதுதொடர்பாக பாமக தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர் குற்றவாளி ஒருவனால் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான  செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாக,  அந்த மாணவியின் பெயர், ஊர் உள்ளிட்ட அடையாளங்களுடன் கூடிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியில் கசியவிடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.  காவல்துறையின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.

மாணவியை இரக்கமற்ற மனித மிருகம் உடல்ரீதியாக வன்கொடுமை செய்தால், காவல்துறையோ மனரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகளில் எத்தகைய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கூட தெரியாத அதிகாரிகளால் கையாளப்படும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா? என்ற ஐயத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட ஒருவரைத் தவிர இன்னொருவர் யார்? என்று தெரியவில்லை.  அவரை பாதுகாக்கும் நோக்கத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் சோர்ந்து போகச் செய்யும் நோக்குடன் தான் காவல்துறை இவ்வாறு செய்கிறதா?  என்ற ஐயம் எழுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை முதல் தகவல் அறிக்கை வாயிலாக வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

click me!