
விருதுநகர்
மணல் ஏற்றிவந்த டிராக்டரை சுற்றுப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் நிறுத்த சொன்னதால் டிராக்டரை இருவர் மீதும் ஏற்றி கொல்ல முயன்றபோது இருவரும் விலகியதால் டிராக்டர், மோதி பைக் அப்பளம் போல நொறுங்கியது.
விருதுநகர் மாவட்டம், எம்.புதுப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் (52), காவலாளர் கணேசன் (30) ஆகியோர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பணி மேற்கொண்டிருந்தனர்.
கோபாலன்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்துமாறு கைகாட்டினர். ஆனால், அந்த டிராக்டரை ஓட்டி வந்தவர் அதனை நிறுத்தாமல் இருவர் மீதும் மோதுவதுபோல தொடர்ந்து ஓட்டி வந்தார்.
இதில், மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி அப்பளம் போல நொறுங்கியது. உதவி ஆய்வாளர், காவலாளர் நல்ல வேளையாக உயிர் தப்பினர்.
டிராக்டரரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதுகுறித்து திருத்தங்கல் காவல் ஆய்வாளர் ராஜா விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவர் பாறைப்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (46) என்பது தெரிந்தது. அவரைத் தனிப்படை அமைத்து காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
காவலாளர்கள் மீதே டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி செய்த காவலாளர் வட்டாரத்தில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.